இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் கட்டணத் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபா பெறுமதியான பரிவர்த்தனைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள் இந்த இலக்கை எட்டியிருப்பது, நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வெறும் 45 நாட்களில் தனது வருமானத்தை 1 பில்லியனிலிருந்து 2 பில்லியன் ரூபாவாக GovPay இரட்டிப்பாக்கியுள்ளது. இதுவரை 70,178-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 221 அரச நிறுவனங்களின் கீழ் உள்ள 3,372 அரச சேவைகளுக்கான கட்டணங்களை இப்போது இத்தளத்தின் ஊடாகச் செலுத்த முடியும்.
2025 ஏப்ரல் 10 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் போக்குவரத்து அபராதக் கொடுப்பனவு முறை மூலம் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 66 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தற்போது ஐந்து மாகாணங்களில் நடைமுறையில் உள்ள இத்திட்டம், சீரற்ற வானிலை காரணமாகத் தாமதமான போதிலும், 2026 ஜனவரியில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.
‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு GovPay ஊடாக 14 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டுள்ளது. இதில் புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை ஆகிய நிறுவனங்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளன. குறிப்பாகக் கல்வித்துறையில் இதற்கு நிலவும் வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மயமாக்கலை விரும்புவதைக் காட்டுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். அதனை எட்டும் நோக்கில், www.govpay.lk இணையத்தளத்தை நவீனமயப்படுத்தும் பணிகளில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஈடுபட்டுள்ளது.

