தற்போதைய அரசாங்கம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதங்களுக்கு எதிராகச் செயல்படத் தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சாடியுள்ளார்.
அண்மையில் அமைச்சர் கே.டி. லால்காந்த வெளியிட்ட கருத்துக்களைச் சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ச தனது விமர்சனங்களை முன்வைத்தார். கோட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இலக்கு வைக்கும் செயலாகும் என நாமல் தெரிவித்தார்.
காவி அங்கி அணிந்தவர்களை (மகா சங்கத்தினர்) பற்றித் தாங்கள் கவலைப்படப் போவதில்லை என அமைச்சர் கூறியிருப்பது, நாட்டின் பௌத்த கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல் என அவர் குற்றம் சுமத்தினார்.
ஊடகச் சந்திப்பில் மேலும் பேசிய அவர், அரசாங்கம் தனது அரசியல் தோல்விகளை மறைக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் நாட்டின் நீண்டகால பாரம்பரியங்களையும் மத விழுமியங்களையும் அழிக்கத் துணிந்துவிட்டதை அமைச்சரின் பேச்சு உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இத்தகைய போக்கிற்கு எதிராகத் தர்மத்தைப் பின்பற்றும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

