தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம், தனக்கான அரசியல் குழியைத் தானே தோண்டிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சீனிகம பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் முன்வைத்த முக்கிய விமர்சனங்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்த தேசிய மக்கள் சக்தி, தற்போது மக்கள் மீது தாங்க முடியாத வரிச் சுமைகளைச் சுமத்தி அவர்களைப் பாதிப்படையச் செய்துள்ளது. அண்மைய இயற்கை அனர்த்தங்களின் போது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வாய்ப்புகள் இருந்தும், அரசாங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
பல குடும்பங்கள் புத்தாண்டு காலத்தைத் தற்காலிக முகாம்களில் கழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் இன்னும் உறுதியான திட்டங்களை முன்வைக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதிகள் இன்னும் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் அவர்களின் வீடுகளில் குடியமர்த்துவதற்கும், அவர்களுக்குத் தேவையான இழப்பீடுகளை உடனடியாக வழங்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாவிட்டாலும், மக்களிடம் பெற்ற வாக்குறுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் நலனுக்காகத் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

