முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளை முழுமையாக இரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட அறிவிப்பில், இது “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (இரத்து செய்தல்) சட்டம்” என அழைக்கப்படும்.
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இதன் மூலம் முழுமையாக நீக்கப்படுகிறது.
இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து, தற்போது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றிருப்பவர்கள் என அனைவரும் அக்கொடுப்பனவைப் பெறுவது உடனடியாக நிறுத்தப்படும்.
1982 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டங்களின் கீழ் ஓய்வூதிய உரிமை பெற்றிருந்த எந்தவொரு நபரும், இனிவரும் காலங்களில் அத்தகைய கொடுப்பனவுகளைக் கோர முடியாது என வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் கால முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான “நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு வரப்பிரசாதங்களை இரத்து செய்தல்” என்பதன் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்களின் வரிப்பணம் பெருமளவில் சேமிக்கப்படும் என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.