🔵தடுப்பூசிப் பாஸ் அடுத்த வாரம்!
🔵சிறுவருக்கு திங்கள் முதல் பூஸ்ரர்
🔵பெப். 2 க்குப் பின் மாஸ்க் “அவுட்!”
🔵இரவு விடுதிகள் பெப்.16 திறப்பு
🔵வீட்டோடு வேலை பெப். 2 முடிவு
பிரான்ஸில் கொரோனா வைரஸின் ஐந்தாவது அலை தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தாலும் அமுலில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவற்றை பெப்ரவரி மாதத்தில் நீக்கிவிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை பிரதமர் ஜீன் காஸ்ரோ மாலையில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.அச்சமயம் சுகாதார அமைச்சரும் அவரோடு பிரசன்னமாகியிருந்தார்.
“ஐந்தாவது தொற்றலை முடிந்து விடவில்லை. ஆனால் கரை தெளிவாகத் தெரிகிறது” என்று பிரதமர் அப்போது தெரிவித்தார். சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றும் திட்டங்களை வரும் நாட்களில் மேலும் முடுக்கி விடுவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 12-17 வயதுப் பிரிவினருக்கு மூன்றாவது டோஸ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஏற்ற ஆரம்பிக்கப்படும். வெளி இடங்களில் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்ற விதி பெப்ரவரி 2முதல் இருக்காது. அதேபோன்று வீட்டில் இருந்து பணிபுரிவது கட்டாயம் என்ற விதியும் அன்றோடு நீங்கும்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் சுகாதாரப் பாஸ்கள் அனைத்தும் தடுப்பூசி பாஸ்களாக எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் (ஜனவரி 24) நடைமுறைக்கு வரும். இரவு விடுதிகள்
பெப்ரவரி 16 முதல் ஆரம்பிக்கப்படும்.
நின்றவாறு நடத்தும் களியாட்ட அரங்குகளும் அன்று முதல் அனுமதிக்கப்படும். விழா மண்டபங்கள், விளையாட்டு அரங்குகள் போன்றவற்றில் ஒன்று கூடுவோரது எண்ணிக்கைக்கும் அதன் பிறகு கட்டுப்பாடுகள் இருக்காது.
🔴தொற்று 5 லட்சத்தைக் கடந்தது!
பிரான்ஸில் கடந்த திங்களன்று மட்டும் பதிவாகிய தொற்றுக்களின் எண்ணிக்கை 5லட்சத்து 25 ஆயிரத்து 527(525,527) என இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்ரா திரிபு ஏற்படுத்திய தாக்கம் முடிவுக்கு வருகிறது என்றும் அதேசமயம் ஒமெக்ரோன் அதன் உச்ச வேகத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, தற்போதைய தொற்றலையின் தாக்கங்கள் தொடர்ந்து மார்ச் மாத நடுப்பகுதி வரை மருத்துவமனைகளில் அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்ற அறிவியல் நிபுணர்கள் குழு (Scientific Council) தெரிவித்துள்ளது.
மிக உச்ச அளவிலான வைரஸ் பரவலாக டிசெம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 9 முதல் 14 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். தொற்று நோய்களின் வரலாற்றில் இது ஒரு சாதனையான எண்ணிக்கை ஆகும் என்றும் அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 நாட்களில் ஒமெக்ரோன் பெரும் எண்ணிக்கையில் சிறுவர்களைப் பீடித்துள்ளது. ஆயினும் அவர்களைப் பொறுத்த வரை பாதிப்புகள் மிதமானவை. எனினும் குழந்தைகளில் அது சுவாசக் குழல் அழற்சி அறிகுறிகள் (pediatric multi-system inflammatory syndrome – PIMS) ஏற்படுத்துகின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் – என்று நிபுணர் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.
#World