தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme) அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உஷானி உமங்கா எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளித்த அமைச்சர், ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், அவற்றுக்கு மேலதிகமாகத் தனியானதொரு ஓய்வூதிய முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
“EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் எங்கும் கூறவில்லை. EPF என்பது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புக்கானது. அதனை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, புதிய ஓய்வூதிய முறையை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்தே ஆராய்கிறோம்” என அவர் விளக்கமளித்தார்.
தனியார் துறை ஊழியர்களும் தங்களது ஓய்வுக்காலத்தில் நிலையான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காகும்.
இலங்கையில் அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் அதேவேளை, தனியார் துறை ஊழியர்கள் தங்களது பணிக்கால முடிவில் EPF மற்றும் ETF நிதிகளை மட்டுமே பெற்று வருகின்றனர். நீண்டகாலமாக நிலவி வரும் இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் தற்போது முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.