ஈரானுடனான மோதல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 01, 2026) புதன்கிழமை இரண்டு வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு 0.4% சரிவடைந்ததைக் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். ஸ்பாட் தங்கம் (Spot Gold) ஒரு அவுன்ஸிற்கு 1% உயர்ந்து 4,717.82 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த மார்ச் 20-ஆம் திகதிக்குப் பிறகு எட்டப்பட்ட மிக உயர்ந்த அளவாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரானின் இராணுவக் கட்டமைப்பு கணிசமாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், போர் முடிவுக்கு வருவதற்கு ஈரான் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், இன்று இரவு 9 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை) தேசத்திற்கு ஆற்றும் உரையில் ஈரான் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார். போர் விரைவில் முடிவடையும் என்ற இந்த நம்பிக்கை அமெரிக்கப் பங்குச் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்துள்ள போதிலும், டொலரின் வீழ்ச்சி தங்கத்தின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் எண்ணெய் விலையேற்றம் மற்றும் பணவீக்கக் கவலைகள் காரணமாகத் தங்கம் 11% சரிவைச் சந்தித்திருந்தது. இது 2008-ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு பதிவான மிகக் கடுமையான மாதாந்திர வீழ்ச்சியாகும். எனினும், ஏப்ரல் மாத விநியோகத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் (Gold Futures) 1.4% அதிகரித்து 4,744.30 டொலர்களாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) இன்னும் முழுமையாகத் திறக்கப்படாவிட்டாலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் பெரும்பாலும் பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகக் கருதப்படுகிறது. தற்போது நிலவும் வட்டி விகித அதிகரிப்புச் சூழலில், வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான மோகம் முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்திருந்தாலும், போர் பதற்றம் தணிந்து அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் வலுப்பெற்றால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேவேளை, வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற ஏனைய உலோகங்களின் விலைகளும் இன்று சிறிய அளவிலான மாற்றங்களுடன் காணப்பட்டன.