சுகாதாரத் துறையில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம் சாட்டி, எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) விசேட மத்திய குழுக் கூட்டம் நாளை (07) நடைபெறவுள்ளது.
சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில். சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சுகாதார சேவை வீழ்ச்சியடைந்து வருவதையும், வைத்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் தீர்க்க அரசாங்கம் முறையான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை.
நாளை நடைபெறவுள்ள விசேட மத்திய குழுக் கூட்டத்தில் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தல், சுகாதார அமைச்சின் மெத்தனப் போக்கிற்கு எதிராகத் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களை அறிவித்தல்.
நோயாளர்களின் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழிமுறைகளை ஆராய்தல் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அரசாங்கம் உடனடியாகத் தலையிடத் தவறினால், சுகாதாரத் துறையில் பாரிய முடக்கம் ஏற்படக்கூடும் என வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் எச்சரித்துள்ளார்.