கினிகத்தேனை பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், அவரது காதலன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை பிரதான பாடசாலை ஒன்றில் 11-ஆம் வகுப்பில் பயிலும் மாணவி. இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருபவர்.
மாணவி, கோணவல பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். காதலனைச் சந்திக்கச் சென்ற போது, அவர் தனது நண்பரின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதலனும் அவரது நண்பர்களும் இணைந்து மாணவியைப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
கடந்த 17-ஆம் திகதி காலை வீட்டை விட்டுச் சென்ற மாணவி, இரவு மிகவும் தாமதமாகத் திரும்பியதால் சந்தேகமடைந்த பாட்டி, கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் நடத்திய விசாரணையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி மேலதிக சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் திங்கட்கிழமை (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் பீட்டர் போல், சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 2, 2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

