காலி டிக்சன் சந்திப்பில் துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

world 73

காலி, டிக்சன் சந்திப்பு பகுதியில் இன்று (மே 12) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், காலி கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர் இலக்கு வைக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டதுடன், காயமடைந்தவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர் குறித்த மேலதிக விபரங்களைச் சேகரிக்கும் பணியில் காலி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்திப்பு பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய கார் மற்றும் அவர்களது அடையளம் குறித்துத் துப்பு துலக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயலாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் மோதல்களுக்கும், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காலி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version