யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.
பலாலியில் தற்போது முதற்கட்ட அபிவிருத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஓடுதளத்தை முழுமையாக விரிவாக்கினால் மட்டுமே Airbus A320 மற்றும் A321 போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும் என கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
இத்தகைய விரிவாக்கம் வட மாகாணத்தின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் விவரித்தார்.
இந்தக் கோரிக்கையைச் செவிமடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பலாலி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து இந்தியா இன்னும் ஆழமாகப் பரிசீலித்து, உரிய தீர்மானங்களை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.