கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிவஞானம் சிறிதரனின் செயற்பாட்டிற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரியான கேர்ணல் ஓ.ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனை, அரசியலமைப்புப் பேரவையில் அண்மையில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த யோசனை ஐந்துக்கு நான்கு என்ற வாக்கு விகிதத்தில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும், சிறு கட்சிகளின் பிரதிநிதியாகப் பேரவையில் அங்கம் வகிக்கும் சிவஞானம் சிறிதரன், இந்த இராணுவமயமாக்கல் முயற்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாகச் செய்திகள் வெளியாகின.
“சிறிதரனை அரசியலமைப்புப் பேரவைக்குத் தாமே முன்மொழிந்த நிலையில், அவரது இந்தச் செயற்பாடு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
சிறிதரன் தனது தீர்மானத்தை ஏதேனும் ஒரு வழியில் திருத்தியமைக்க வேண்டும் அல்லது இதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தவறும் பட்சத்தில், சிறிதரனுக்குத் தாம் வழங்கிய ஆதரவை உடனடியாக மீளப்பெற நேரிடும் என கஜேந்திரகுமார் எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (23) கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.