இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நேற்று (நவம்பர் 10) ஆரம்பமான நிலையில், இது டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில், இது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
இன்று குறித்த நேரத்தில் பரீட்சை ஆரம்பமானது. அதேபோல், நாட்டிலுள்ள அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் எவ்விதத் தடங்கலும் இன்றிப் பரீட்சை வழமைபோல நடைபெற்றது. பரீட்சை முடிவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க தற்போது நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அவர் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள். உரிய கால அட்டவணையைப் பரிசோதித்து, பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே குறித்த பரீட்சை நிலையத்திற்குச் செல்லுங்கள்.
அரை மணி நேரத்திற்கு முன்னதாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருங்கள். மண்டபங்களுக்குள் பிரவேசிப்பதற்கான பரீட்சை அனுமதிப் பத்திரத்தை எடுத்துச் செல்லுங்கள்.

