தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இது குறித்துத் தெரிவிக்கையில் நாட்டின் களஞ்சிய வசதிக்கு ஏற்ப, அடுத்த 20 முதல் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் எரிபொருள் இருப்புகளுக்கோ அல்லது விநியோகத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அது குறித்து இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகச் சந்தை நிலவரம் மற்றும் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் விலை திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.
எரிபொருள் இறக்குமதிகள் முறையான திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கப்படுவதால், நுகர்வோர் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.