பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான மயக்க மருந்து நிபுணரான பிரடெரிக் பெஷியர் (Frédéric Péchier) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
விசாரணையில், சத்திரசிகிச்சையின் போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து வழங்குவதற்குப் பதிலாக, இதயத் துடிப்பை நிறுத்தக்கூடிய பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை இவர் இரகசியமாகச் செலுத்தியுள்ளார்.
நோயாளிகளுக்குச் செயற்கையாக மாரடைப்பை வரவழைத்துவிட்டு, பின்னர் அவர்களைத் தனது மருத்துவத் திறமையால் காப்பாற்றுவது போல நடித்து, தன்னை ஒரு மிகச்சிறந்த மருத்துவராகவும் ‘கதாநாயகனாகவும்’ (Hero) சக ஊழியர்கள் மத்தியில் காட்டிக்கொள்ள இவர் முயற்சி செய்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 30 பேருக்கு இவர் இவ்வாறு விஷ ஊசி செலுத்தியுள்ள நிலையில், அதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் முன்வைத்த வலுவான ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் எனக் கருதி பிரடெரிக் பெஷியருக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
மருத்துவ உலகின் புனிதத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

