கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் சுற்றுலா விடுதி வளாகத்தில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மின்சார சபை ஊழியர்கள் நால்வர் விசேட அதிரடிப்படையினரால் (STF) ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி டி.ஆர்.எல். அதுக்கோரல தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வரும் அனுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய நவீன உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
உரிய அனுமதியின்றி அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டமை.தாம் தங்கியிருந்த மின்சார சபையின் சுற்றுலா விடுதியைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமை.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிரடிப்படையினர், அவர்களைக் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மின்சார சபை ஊழியர்களே இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.