எயார்பஸ் ஊழல் வழக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவுக்குப் பிணை

world 13

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) பிணை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அவர், நீண்ட விசாரணைக்குப் பிறகு நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், கபில சந்திரசேன வெளிநாடுகளுக்குச் செல்ல நீதவான் தடை விதித்துள்ளதுடன், அவரது கடவுச்சீட்டையும் நீதிமன்றப் பொறுப்பில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கபில சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன பிணைக் கோரிக்கையை முன்வைத்தார். எனினும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அப்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான், பிணை குறித்த தனது இறுதித் தீர்மானத்தை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தார்.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் இடம்பெற்றதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, இலங்கையின் முக்கியமான ஊழல் விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கபில சந்திரசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Exit mobile version