முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் காயம்: மதுபோதையில் இருந்த சாரதி கைது!

gallery 1768635544 696b3c987f0d9

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) மனைவி நேற்று (16) இரவு இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களனி – பியகம வீதியில் அமைந்துள்ள அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அசோக ரன்வலவின் மனைவி தனது காரைச் செலுத்தி வந்து, அதனை வீட்டிற்குள் திருப்ப முற்பட்ட வேளையில், களனி திசையிலிருந்து வந்த மற்றுமொரு கார் இவரது காரில் பலமாக மோதியுள்ளது.

விபத்து நடந்த போது பாராளுமன்ற உறுப்பினரின் (அசோக ரன்வல) வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாகப் பியகம பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மற்றைய காரின் சாரதி களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விபத்தின் போது மது அருந்தியிருந்தமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவின் மனைவி தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய சாரதியைக் கைது செய்துள்ள பியகம பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version