முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரணை செய்யக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், அவர் நேற்று (26) கைது செய்யப்பட்டார்.
இன்று (27) சந்தேகநபர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியத்தைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெளிவுபடுத்தினர்.
புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் 3 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்கப் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.
குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது அல்லது யாருக்காவது வழங்கப்பட்டதா என்பது தொடர்பான கோணங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.