நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில், கிரகரி வாவிக்கு (Gregory Lake) அருகாமையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் உள்ளிட்ட இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று (15) பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேகமாகச் சென்ற வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது. இதன்போது, எதிர்த் திசையில் வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. விபத்தின் தீவிரத்தினால் இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
அதிவேகமாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நுவரெலியா காவல்துறைப் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.