நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (மார்ச் 31, 2026) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் ஏனைய செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த இக்கட்டான முடிவை எடுத்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
புதிய விலை திருத்தத்தின்படி, நுகர்வோர் மத்தியில் அதிக கேள்வியுள்ள பொதி செய்யப்பட்ட சோறு (Packeted Rice), ப்ரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) ஆகியவற்றின் விலைகள் தலா 30 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளன. அதேபோல், சிற்றுண்டி (Short Eats) வகைகளின் விலைகள் 10 ரூபாயாலும், ஒரு கோப்பை தேநீர் (Plain Tea) மற்றும் பால் தேநீர் (Milk Tea) ஆகியவற்றின் விலைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளன. ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்தினால் உணவகங்களின் மாதாந்தச் செலவீனம் பெருமளவில் அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஷன ருக்ஷான், “பெரும்பாலான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மாதத்திற்கு 180 அலகுகளுக்கும் (Units) அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் அவை அதிக கட்டணப் பட்டியலுக்குள் உள்ளீர்க்கப்படுகின்றன. ஏற்கனவே எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த விலை அதிகரிப்பு அவசியமானது” எனத் தெரிவித்தார். கடந்த மார்ச் 11-ஆம் திகதியும் எரிவாயு விலையேற்றத்தைக் காரணம் காட்டி சிறியளவிலான விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இக்கட்டான பொருளாதாரச் சூழலில் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில், அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தில் ஏதேனும் சலுகைகளை வழங்கினால் இந்த விலை அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சித்திரை புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில் உணவகங்களின் இந்த விலை அதிகரிப்பு நடுத்தர வர்க்கப் பொதுமக்கள் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.