அவுஸ்திரேலியாவின் விக்டோரியா (Victoria) மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் நிலவி வரும் கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
விக்டோரியாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்புகளை விஞ்சும் வகையில் மிகக்குறுகிய நேரத்திற்குள் 169 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீரோடைகள் சடுதியாகப் பெருக்கெடுத்துக் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
கடற்கரையோர வீதிகள் மற்றும் வாகன தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்துள்ளன. இது தொடர்பான காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் மற்றும் வணிக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விக்டோரியா மாநில காவல்துறையினர் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் (SES) பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில மணிநேரங்களுக்குத் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடரக்கூடும் என்பதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.