போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

dom penzionera 2

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துஸ்லாவில் உள்ள அந்தக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. போஸ்னியா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வளாகத்தின் மேல்தளங்களில் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். நிலைமையை மதிப்பிடுவதற்காக, நேற்று புதன்கிழமை (நவம்பர் 05) அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் துஸ்லா மேயர் ஸிஜாத் லுகாவிக் தெரிவித்தார்.

அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கும் ருசா காஜிக் என்ற பெண், தான் தூங்கச் சென்ற போது “வெடிக்கும் சத்தங்கள்” கேட்டதாகவும், மேல்தளங்களிலிருந்து தீப்பிழம்புகள் விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version