முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது அந்தரங்கப் புகைப்படங்கள் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) குழுக்களில் பகிரப்பட்டுள்ளதாகவும், இதற்குத் தனது முன்னாள் காதலியே காரணம் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குறித்த பெண்ணின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், சந்தேக நபரான இளம்பெண்ணும், பாதிக்கப்பட்ட இளைஞரும் சுமார் 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
காதல் உறவு முறிந்ததனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளானதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட பழிவாங்கும் உணர்சியிலேயே இந்தப் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அந்தப் பெண் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.