தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மத்தல நோக்கிப் பயணித்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்திலிருந்த பாதுகாப்பு வேலியுடன் (Guard Rail) மோதி கவிழ்ந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த 30 மற்றும் 36 வயதுடைய இருவர் காயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காரை ஓட்டிச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே (Drowsiness) இந்த விபத்திற்கு முதன்மைக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகப் பின்னதூவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது சாரதிகள் போதிய ஓய்வுடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.