உயிலங்குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!!

pond

உயிலங்குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!!

முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை புனரமைப்பதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம் என கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் த.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின் காரணமாக குளத்தின் அணைக்கட்டில் அரிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகள் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கப்பட்டது.

குறித்த குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்க வேண்டிய தேவை உள்ளது என விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் இன்றுவரை குறித்த குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கபடாத நிலையில் காணப்படுகின்றது.

கடந்த காலங்களிலே பல்வேறு திட்டங்களில் அதன் புனரமைப்புப் பணிகளுக்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறாததால் குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கப்படவில்லை.

இந்த குளத்தின் அணைக்கட்டை போக்குவரத்துப் பாதையாக பயன்படுத்துவதால் இதனை புனரமைப்பதில் இடர்பாடுகள் காணப்படுகின்றன என விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது மேற்படி உயிலங்குளத்தில் 63 பயனாளிகள் 139 ஏக்கர் வயல் காணிகளில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் குளத்தைப் புனரமைப்பதற்கு 10 மில்லியன் ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிகரித்த அளவில் தேவை காணப்படுகின்றது.

அதேவேளை குறித்த அணைக்கட்டு துணுக்காய் பிரதேசத்துக்கு உட்பட்ட விவசாய கிராமங்களுக்கான பாதையாக காணப்படுகின்ற நிலையில் குளத்தின் அணைக்கட்டின் ஊடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே அணைக்கட்டுக்கு கீழான பகுதியில் வீதி அமைக்கப்படும்போது தான் குளத்தைப் புனரமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான குறித்த வீதியை புனரமைப்பதற்கு 44 மில்லியன் ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இரண்டு திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் இவ் வீதியையும் குளத்தின் அணைக்கட்டையும் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே எதிர்வரும் காலங்களில் இக்குளம் புனரமைக்கப்படாதிருந்தால் பெரும் ஆபத்துகளை எதிர்கொள்வதுடன் இதன் கீழான விவசாயமும் பாதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version