தீபாவளிப் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பல பகுதிகளுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

1760770586 we

தீபாவளிப் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களுக்குப் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (LTC) பிரதி பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று (அக்டோபர் 18) புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு 75 மேலதிகப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

நாளை (அக்டோபர் 19) கொழும்பிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு 73 மேலதிகப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த விசேட பேருந்து சேவை 24 மணி நேரமும் இயங்கும்.

மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) முதல் கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் 12 பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு, தீபாவளிக்காகப் புறக்கோட்டையில் உள்ள மகும்புர மற்றும் பாஸ்டியன் மாவத்தையிலிருந்து சிறப்புப் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தொடருந்து திணைக்களம், இன்றும் (18) நாளையும் (19) தொடருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version