ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணையின் போது விபரீதம்: மொஸ்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யெலெட்ஸ்கயா (Yeletskaya) வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரணை நடத்த முற்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது எதிர்பாராத விதமாகப் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயற்சித்தல் மற்றும் சட்டவிரோத வெடிபொருட்கள் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு (Investigative Committee) வழக்குப் பதிவு செய்துள்ளது. இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா அல்லது திட்டமிடப்பட்ட குற்றச் செயலா என்பது குறித்துத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.