சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 56-வது உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பெண்களின் தலைமைத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆற்றிய உரை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
“மாறிவரும் உலக ஒழுங்கை வழிநடத்தும் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர், தீர்மானம் எடுக்கும் மையங்களில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல; அது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் விளைவு.
பெண்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயப் பங்களிப்புகள் இன்னும் சமூகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.
அரசியலில் ஈடுபடும் பெண்கள் சந்திக்கும் அவதூறுகள், ஒடுக்குமுறைகள் மற்றும் ஓரங்கட்டப்படுதல் போன்ற தாக்குதல்களே அவர்களைத் தலைமைத்துவத்திலிருந்து விலகச் செய்கின்றன.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை ஒரு வெற்றிகரமான முன்னுதாரணமாகப் பிரதமர் உலக நாடுகளுக்கு முன்வைத்தார்.”மக்களின் நெகிழ்ச்சித்தன்மையும் அரசியல் அர்ப்பணிப்பும் இணையும் போது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சான்று. வரலாற்றில் முதல்முறையாக எமது நாடாளுமன்றத்திற்கு 20 பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்.”
தலைமைத்துவம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, அது தற்போதுள்ள அமைப்புகளை மறுசீரமைப்பதாகும் என அவர் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில் பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினர் வெறும் பார்வையாளர்களாக இருக்காமல், உலகக் கொள்கைகளை வடிவமைக்கும் முதன்மை ஆளுமைகளாகத் திகழ்வார்கள் எனத் தனது உரையில் பிரதமர் ஹரிணி உறுதியாகத் தெரிவித்தார்.