கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய வர்த்தக வரிகளுக்கு ஐரோப்பியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) கூறுகையில், “நட்பு நாடுகள் மீது இத்தகைய வரி விதிப்பை மேற்கொள்வது முற்றிலும் தவறானது” என விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது ஒரு “ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு” என்றும், எத்தகைய அச்சுறுத்தல்களும் ஐரோப்பாவின் நிலைப்பாட்டை மாற்றாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்துவதில் ஐரோப்பா உறுதியாக உள்ளது,” என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (Antonio Costa) குறிப்பிட்டுள்ளார். சுவீடன் உள்ளிட்ட நாடுகளும் இக்கண்டனத்தில் இணைந்துள்ளன.
பெப்ரவரி 1 முதல் 10% கூடுதல் வரி விதிக்கப்படும். ஜூன் மாதத்திற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் இது 25% ஆக அதிகரிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து.
குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், கிரீன்லாந்து இயற்கை வளங்கள் மற்றும் மூலோபாய ரீதியாக மிக முக்கியமானது. வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளதால், ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் பாதுகாப்பு அமைப்புகளை அமைக்க இது சிறந்த இடமாகும்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கவும் இது அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக “Hands Off Greenland” மற்றும் “Make America Go Away” என்ற வாசகங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் டென்மார்க்கின் கோபன்ஹேகன் மற்றும் கிரீன்லாந்தின் நூக் (Nuuk) நகரில் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக ஒரு நாட்டை விலைக்கு வாங்க முயற்சிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.