மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி காரணமாக, இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், இந்தப் போர்ச் சூழல் விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளதால் விலையேற்றம் முன்கூட்டியே ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் மற்றும் காப்புறுதிச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சந்தையில் வேகமாக உயர்ந்து வருகின்றன. தம்புள்ளை மற்றும் பேட்டை போன்ற பிரதான மொத்த விற்பனைச் சந்தைகளில், முன்னர் 230 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பருப்பு, தற்போது 310 முதல் 315 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சில சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பருப்பு 350 முதல் 360 ரூபாய் வரையான உச்ச விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறையிட்டுள்ளனர்.
நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பும், போக்குவரத்துச் செலவுகளும் இந்தப் பொருட்களின் இறுதி விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பருப்பு மாத்திரமன்றி, ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி போன்ற பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் ஏனைய சமையல் எண்ணெய் வகைகளின் விலைகளும் 10% முதல் 15% வரை அதிகரித்துள்ளன. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றிப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.