தமது ‘எக்ஸ்’ (X) தளத்தின் Grok செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சிறுவர்களின் தவறான படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டுகளை ஈலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இது குறித்து மஸ்க், Grok தானாக எவ்விதப் படங்களையும் உருவாக்குவதில்லை; பயனர்களின் குறிப்பிட்ட கட்டளைகளுக்கு (Prompts) அமைவாகவே அது செயற்படுகிறது.
எந்தவொரு நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே Grok வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதச் செயல்களில் இது ஈடுபடுவதில்லை.
சில நேரங்களில் ஹேக்கர்கள் வேண்டுமென்றே பிழையான வழிகளில் Grok-ஐத் தூண்டும்போது (Jailbreaking) எதிர்பாராத முடிவுகள் கிடைக்கலாம். இவ்வாறான தொழில்நுட்பக் குறைபாடுகள் கண்டறியப்பட்டவுடன் உடனடியாகச் சரிசெய்யப்படுகின்றன.
Grok மூலம் சிறுவர்களின் பாலியல் ரீதியான சித்திரங்கள் உருவாக்கப்படுவதாகப் பல நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதன் விளைவாக சில நாடுகள் இந்தச் செயலியைத் தமது நாடுகளில் தடை செய்வது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.
அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகளைக் கருத்திற்கொண்டு, Grok-இன் படங்களை உருவாக்கும் மற்றும் திருத்தும் வசதிகள் (Image generation & editing) இனி கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு (Premium Subscribers) மாத்திரமே வழங்கப்படும் என xAI நிறுவனம் அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலிப் படங்கள் (Deepfakes) உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் மீதான இந்த விமர்சனங்கள் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.