டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
மஸ்க் இந்த மைல்கல்லை எட்ட அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் அசுர வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 800 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டு, அதன் பங்குகள் அதிக விலைக்குப் பட்டியலிடப்பட்டதால் இவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
புதன்கிழமை (17) நிலவரப்படி, எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
எலான் மஸ்க் தற்போது உலகின் பெரும் பணக்காரராக இருப்பதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்து வருகிறார். முன்னதாக அவர் அமெரிக்காவின் திறன் மதிப்பீட்டுத் துறையின் (DOGE) தலைவராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 500 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்ற மஸ்க், இரண்டே மாதங்களில் அடுத்த மைல்கல்லை எட்டியிருப்பது உலகப் பொருளாதார நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

