ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சுமார் ரூ. 11 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துகளையும், தவானின் ரூ.4.50 கோடி மதிப்பிலான சொத்துகளையும் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் சகலதுறை வீரராக பல்வேறு போட்டிகளில் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர்.
இந்திய அணிக்காக இவர் 226 ஒருநாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும், 78 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
இவரை சென்னை அணியின் ரசிகர்கள் சின்ன தல என்று அன்புடன் அழைக்கிறார்கள். 38 வயதாகும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலியை சுரேஷ் ரெய்னா விளம்பரப்படுத்தியதாக முறைப்பாடுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை விசாரணையில் முன்னிலையாகுமாறு ரெய்னாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இருவரது ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.