உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி விவகாரம்: ‘வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம்!’ – பாராளுமன்றத்தில் கேள்வி!

Easter Sunday Attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பான அனைத்துத் தகவல்களும் தங்களிடம் இருப்பதாகக் கூறியும், விரைவாகக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அளித்த வாக்குறுதியை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்தும் நிறைவேற்றத் தவறிவிட்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரோஹித்த அபேகுணவர்த்தன தனது உரையில் அரசாங்கத்தை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தது.

அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி எங்கே என கேட்கிறோம். தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் இருப்பதாகத் தெரிவித்தீர்கள். ஏன் இன்னும் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் வரை கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை எதிர்பார்த்திருக்கிறார் என்றும், நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யார் எப்படி இதனைத் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தாலும், அது தேசியக் குற்றமாகும். இந்தக் குற்றத்துடன் தொடர்புபட்டவர்களுக்குச் சட்டம் நிலைநாட்டப்படாவிட்டாலும் கடவுளின் சாபம் கிடைக்கும்.

பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்தத் தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் என அனைத்தும் அரசாங்கத்திடம் இருக்கின்றன என்றார்.

தொடர்ந்தும் இந்த விடயத்தைப் பிற்படுத்தாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கைதுசெய்து, நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த பிரச்சினையும் பட்டலந்த வதைமுகாம் விவாதம் போன்று வெறும் பேசுபொருளாக மாத்திரமே இருந்துவரும். அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version