கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம் மெளனம் காப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக பதிலளித்துத் தீர்வு காணுமாறு அதிகாரிகளை குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது “தொழிற்சங்கங்கள் இந்த மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியபோது, அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டதுபோல் நடித்துவிட்டு, தற்போது 9 மாகாணங்களுக்கும் காண்பிக்கப்பட்ட அதே திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.”
அத்துடன் மறுசீரமைப்புகள் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு (workshops) கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியிருந்தாலும், அத்தகைய கட்டணம் எதுவும் இதுவரை செலுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார்.