டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்: விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

09 15

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் தாங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து டுபாய் சிவில் வானூர்திப் போக்குவரத்து ஆணைக்குழு (Dubai Civil Aviation Authority) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அவசர சேவையினர் நிலைமையை முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர். விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு வரவிருந்த பயணிகளும், அங்கிருந்து புறப்படவிருந்த பயணிகளும் தத்தமது விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இவ்வாறான உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் சர்வதேச போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version