யாழ். மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின் போது இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன:
2025-ஆம் ஆண்டு கைதுகள்: ஹெரோயின், ஐஸ் (Ice), கஞ்சா மற்றும் ‘குஷ்’ போன்ற உயிர்கொல்லிப் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையுடன் தொடர்புடைய 7,040 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் வலயம்: 2024-இல் 2,450 ஆக இருந்த கைதுகள், 2025-இல் 4,380 ஆக உயர்ந்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் வலயம்: 2024-இல் 1,614 ஆக இருந்த கைதுகள், 2025-இல் 2,654 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் யாழ். மாவட்டத்தில் மொத்தம் 14,786 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கையே காட்டுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த பிரதேச மட்டக் குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.