பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

download 1

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு, நான்கு கார்களைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சேதப்படுத்திய 29 வயதுடைய இளைஞரை எதிர்வரும் ஜனவரி 22-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டே வீதியில் சென்ற வாகனங்களைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர். மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் ‘ஐஸ்’ (ICE) மற்றும் ‘ஹெரோயின்’ போதைப்பொருட்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே போதைப்பொருள் பாவனைக்காகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக முன்னேற்ற அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.

 

 

Exit mobile version