பத்தரமுல்ல, தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவாறு, நான்கு கார்களைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் இன்று (13) கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 22-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, கைது செய்யப்படும்போது இவரது உடலில் ஐஸ் (ICE) மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே அதிகளவு போதைப்பொருள் பாவனைக்காகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான மேலதிக முன்னேற்ற அறிக்கையை அடுத்த மன்றுத் திகதியன்று சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டார். வீதியில் சென்ற வாகனங்களுக்குத் தன்னிச்சையாகச் சேதம் விளைவித்த இச்சம்பவம் அப்பகுதி வாகன சாரதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.