கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலைப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025 டிசம்பர் 09-ஆம் திகதி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் (Facebook) வெளியான ஒரு சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த காணொளியில் பேசியுள்ள அசேல சம்பத் என்ற நபர், “வைத்தியர் ருக்ஷன் பெல்லனவைச் சுடுவதற்கு அனில் ஜெயசிங்க தயாராகி வருகிறார்” எனத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்தத் தகவல் ஒரு கொலைச் சதி முயற்சி தொடர்பானதாகக் கருதப்படுவதால், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வைத்தியர் பெல்லன அழைக்கப்பட்டுள்ளார்.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி வழங்கிய அறிவுறுத்தலின்படி பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தின் 4-வது மாடியில் அமைந்துள்ள கொலைப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையாக வேண்டும்.
இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பான தனது தரப்பு விளக்கத்தை வழங்குவதற்கும், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கும் சிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதாரத் துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையே நிலவி வரும் தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தற்போது பொலிஸ் விசாரணை வரை சென்றுள்ளதுடன், இது வைத்தியசாலை நிர்வாக மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.