ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெப்போதும் இல்லாத வகையில் இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முற்றுகையின் மூலம் ட்ரம்ப் எவ்விதமான பெரும் வெற்றியையும் ஈட்டவில்லை என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் துணை உதவிச் செயலாளர் டேவிட் செட்னி விமர்சித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவை விட சீனா, இந்தியா மற்றும் தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளே எரிசக்தி ரீதியாகப் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, உலகளாவிய ரீதியில் அமெரிக்காவிற்குப் பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஈரானுக்கு எதிரான நேரடி இராணுவ நடவடிக்கையை விரும்புவதில்லை என்பதும் ட்ரம்ப்பிற்கு உள்ளூர் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய மசகு எண்ணெய் விற்பனைக்காக வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தளர்வுகளை இனி நீடிக்கப் போவதில்லை என்று அமெரிக்கத் திறைசேரித் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எரிசக்தித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கடந்த மார்ச் 20-ஆம் திகதி வழங்கப்பட்ட 30 நாட்கள் அவகாசம் எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது ‘இரண்டாம் நிலைத் தடைகளை’ (Secondary Sanctions) விதிக்கவும் அமெரிக்கா தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் இந்த இறுக்கமான பிடிக்கு மத்தியில், அமெரிக்காவின் பங்களிப்பு இன்றியே ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான புதிய திட்டமொன்றை ஐரோப்பிய நாடுகள் தயாரித்து வருவதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காக ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க ஐரோப்பா ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவைத் தவிர்த்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைத்து எரிசக்தி விநியோகத்தைச் சீராக்க ஐரோப்பிய நாடுகள் முயன்று வருவதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.