நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கனடாவில் இருக்கும் மணமகனுக்கும், இந்தியாவில் இருக்கும் மணமகளுக்கும் இணையவழியில் (Online) நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மணமகன் கனடாவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார், மணமகள் இந்தியாவில் வசித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று நிச்சயதார்த்தம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மணமகனுக்கு கனடாவில் விடுமுறை கிடைக்காத காரணத்தால் அவரால் இந்தியா வர முடியாத நிலை ஏற்பட்டது.
நிச்சயதார்த்தத்தை ஒத்திவைக்க விரும்பாத இரு வீட்டாரும், அதனை இணையவழியில் நடத்த முடிவெடுத்தனர். இந்தியாவின் ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமான திரை (Screen) அமைக்கப்பட்டு, கனடாவிலிருந்து மணமகன் நேரலையில் இணைக்கப்பட்டார்.
மணமகள் மேடையில் அமர்ந்திருக்க, திரையில் தோன்றிய மணமகனுடன் பிராமண சம்பிரதாய முறைப்படி சடங்குகள் அனைத்தும் இனிதே நிறைவேற்றப்பட்டன.
இந்த இணையவழி நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, மணமகன் விடுமுறையில் ஊர் திரும்பியதும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.