இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இன்று காலை வீதிகள் தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி சூழ்ந்த காரணத்தினால், ரோஹ்தக், ஹிசார் மற்றும் ரேவாரி மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். ரோஹ்தக் மாவட்டத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளன.
ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைச் சந்திப்பில் முதலில் ஒரு லொறி மற்றும் ஒரு கார் மோதிக்கொண்டன. தொடர்ந்து, பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில், சுமார் 35 முதல் 40 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இதில் பல வாகனங்கள் நொறுங்கின. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று லொறியுடன் மோதியது. இதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து, ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற பயணிகள் காயமின்றி தப்பியதாகத் தெரிகிறது.
ரேவாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில், மூன்று முதல் நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானாவில் கடந்த சில நாட்களாகக் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அடர்ந்த மூடுபனி உருவாகும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும், வாகனங்களுக்கு இடையேயான பாதுகாப்பான தூரத்தைக் கடைபிடிக்கவும் வாகனச் சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.