ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது, எந்தவித நிபந்தனைகளும் இன்றி மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தற்போது எந்த நிபந்தனையுமின்றி பரந்த மனப்பான்மையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு கட்சியும் தத்தமது தனித்துவத்தைப் பேணிக்கொண்டு, பொதுவான தமிழ்த் தேசிய இலக்குகளுக்காக ஒன்றிணைந்து பயணிக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் இதேபோன்று நிபந்தனைகளின்றி ஒன்றிணைய வேண்டும் எனத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும் பொதுச்செயலாளரும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
சிங்களத் தேசியக் கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவைத் தராது எனச் சிவஞானம் இதன்போது வலியுறுத்தினார்.
“சிங்களக் கட்சிகளுக்குள் எமது மக்கள் ஊடுருவிப் பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களால் ஒருபோதும் சிங்களத் தலைமைகளுக்கு மேலாகச் சென்று முடிவெடுக்க முடியாது.”
தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதறடிக்காமல், ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

