டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10ஆம் திகதி இரவு வெடிபொருளை மறைத்து எடுத்துச் சென்ற கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்தை தேசிய புலனாய்வு சேவை (NIA) விசாரித்து வருகிறது.
கார் வெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்பட்ட உமர் மொஹமட் என்பவரே பலியானார்.
கார் மற்றும் வெடிப்புப் பகுதியில் கிடந்த சதைப்பகுதிகள், உமர் மொஹமட்டின் தாயாரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டது. இரண்டு டி.என்.ஏ. மாதிரிகளும் பொருந்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில், இது ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதல் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பு சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மீது ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகமே, பயங்கரவாதிகளின் குற்றப்பயணத்தைப் பின்தொடர வழிவகுத்தது.
பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய ஒரு வைத்தியக் குழு நாட்டில் பல இடங்களில், குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்தத் திட்டமிட்டு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இர்பான் அகமது என்பவரையும், ஒரு மருத்துவரையும் முதலில் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் வைத்தியர் அதீல் ராதர் கைது செய்யப்பட்டார். இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியானா மாநிலம் அல்பலா மருத்துவப் பல்கலைக்கழக வைத்தியர்கள் பலர் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பரிதாபாத்தில் வைத்தியர் முசமில் ஷகீலும், பெண் வைத்தியர் ஷாகீத்தும் பிடிபட்டனர்.
முசமில் ஷகீலின் அடுக்குமாடி அறையில் இருந்து 360 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து ஏற்கனவே 3,000 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் மொஹமட், வெடிபொருட்களைத் தான் கொள்வனவு செய்த காரில் எடுத்துச் சென்றுள்ளார்.
விசாரணையில் உமர் மொஹமட் மேலும் 2 கார்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவற்றில் சிவப்பு நிற கார் ஒன்று அரியானா மாநிலம் கண்டவாலி கிராமத்துக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், நேற்று மாலை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு காரைத் தேடும் பணி தொடர்கிறது.
3 கார்கள் வாங்கப்பட்டதை வைத்து, பயங்கரவாதிகள் அவற்றை டெல்லியில் ஆங்காங்கே நிறுத்தி வெடிக்க வைக்கத் திட்டமிட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. வெடித்துச் சிதறிய கார் கடந்த தீபாவளிக்கு முன்பு செங்கோட்டைப் பகுதியில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
வைத்தியர் முசமில் ஷகீலின் செல்போன் தகவல்களின்படி, குடியரசு தினம், தீபாவளி பண்டிகை மற்றும் டிசம்பர் 6ஆம் திகதி (பாபர் மசூதி இடிப்பு தினம்) போன்ற முக்கியமான தினங்களில் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல்துறையினரின் தீவிர ரோந்துப் பணியால் அந்தச் சதிச் செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்ட ஆத்திரத்தில், நவம்பர் 10ஆம் திகதி உமர் மொஹமட் காரை வெடிக்கச் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சம்பவத்திற்கு முன்பாக உமர் மொஹமட், செங்கோட்டை அருகே ராம்லீலா மெய்டன் ஆசாம் அலி சாலையில் உள்ள ஒரு மசூதியில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.

