ஹட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவர் சுமார் 2.89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கடைக்குள் நுழைந்து பல தங்கச் சங்கிலிகளைப் பார்வையிட்டுள்ளார். பின்னர் ஒரு சங்கிலியைத் தெரிவு செய்து, அதற்கான பற்றுச்சீட்டை (Bill) எழுதுமாறு கடையில் இருந்த ஊழியர்களிடம் கோரியுள்ளார்.
ஊழியர்கள் பற்றுச்சீட்டைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த நகையை எடுத்துக்கொண்டு நபர் கடையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
இச்சம்பவம் நடந்த போது கடையின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்ததாகவும், கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு 2,89,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழுத் திருட்டுச் சம்பவமும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
கடை உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.