பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராகத் தயாசிறி ஜயசேகர இன்று உரையாற்றியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் இன்று (22) உரையாற்றிய போதே அமைச்சர் நளிந்த இந்த அதிரடித் தகவலை வெளியிட்டார். அவரது உரையில், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஹிஸ்புல்லா எம்.பி உள்ளிட்ட பலர் இந்தப் பிரேரணையில் கையொப்பமிடவில்லை.
அரசியலமைப்புச் சபையை முன்னிலைப்படுத்திச் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராகத் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் பேசியதன் பின்னணியில், இந்த அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே எமக்குத் தோன்றுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஒரு சிறு குழுவின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல், மனசாட்சிப்படி செயற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை இப்போது குறிவைக்க ஆரம்பித்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்க 20 உறுப்பினர்களின் கையொப்பம் போதுமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், “எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது 20-க்கும் மேற்பட்டோர் இருந்தும், ஒரு சிலரே கையொப்பமிடவில்லை. தயவுசெய்து அந்தப் பிரேரணையைச் சபைக்குக் கொண்டுவாருங்கள்” என வினயமாகக் கேட்டுக்கொண்டார்.
அரசியலமைப்புச் சபையின் நியமனங்கள் தொடர்பாகத் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விமர்சனங்கள், உண்மையில் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தராத தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களை அச்சுறுத்தும் ஒரு முயற்சியாகவே ஆளும் தரப்பால் பார்க்கப்படுகிறது.

