2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சாம் கரன் (Sam Curran) இடுப்புப் பகுதி உபாதை (Groin injury) காரணமாக இந்தத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி வீரருமான தசுன் ஷானக்க (Dasun Shanaka) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாம் கரன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்திற்கு முந்தைய வீரர் பரிமாற்றத்தின் (Trade) மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணி வாங்கியிருந்தது. எனினும், அண்மையில் முடிவடைந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக சாம் கரன் இம்முறை விளையாட மாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் (Lahore Qalandars) அணிக்காக விளையாடி வரும் தசுன் ஷானக்க, ஐபிஎல் வாய்ப்புக்காக அந்தத் தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் லாகூர் அணி நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஷானக்க அண்மைய போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஓமானுக்கு எதிராக 20 பந்துகளில் அரைசதமும், பாகிஸ்தானுக்கு எதிராக 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடருக்காக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகும் இரண்டாவது வீரர் ஷானக்க ஆவார். முன்னதாக, ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி (Blessing Muzarabani) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்காக இஸ்லாமாபாத் யுனைடெட் அணியிலிருந்து விலகியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் மார்ச் 30-ஆம் திகதி கௌஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ஷானக்கவின் வருகை அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

