நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane), பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நேற்று (09) மாலை 6 மணியளவில் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது.
நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஒன்றிணைந்து இந்த மீட்புப் பணியை முன்னெடுத்தனர்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பாரந்தூக்கிகள் (Cranes) மூலம் விமானம் வாவியிலிருந்து கரைக்குத் தூக்கி எடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் நிலவும் கடும் பனிமூட்டம், மோசமான வானிலை மற்றும் வாவியின் அடிப்பகுதியில் உள்ள அதிகப்படியான சேறு காரணமாக விமானத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
விமானம் விபத்துக்குள்ளான போதும், பின்னர் அதனை மீட்கும் பணியின் போதும் அதன் கட்டமைப்புக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்துத் தீவிர விசாரணை நடத்துவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

